ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவிக்கும் ஒருங்கிணைந்த இன்னிசை வழிபாடு கிழக்குப் பிராந்திய திருச்சபைகளான கித்துள் திருகோணமலை, பெரிய நீலாவணை, தும்பலாஞ் சோலை, இறாலோடை, முறக்கொட்டாஞ்சேனை, மற்றும் ஊறணி திருச்சபைகள் இணைந்து பெரிய நீலாவணை திருச்சபையிலே 09.12.2023 ம் திகதி நடைபெற்றது. திருச்சபை அருட்பணியளார்களான அருட்பணி. எஸ். ஜோன் புவியரசன் - பெரிய நீலாவணை திருச்சபை, அருட்பணி. எஸ். டானியல் செல்வகுமார் - கித்துள் தும்பலாஞ்சோலை திருச்சபை, அருட்பணி. பியூறா செல்வகுமார் - முறக்கொட்டாஞ்சேனை திருச்சபை, அருட்பணி. நிவில்ரூபராஜ் - இராலோடை திருச்சபை, அருட்பணி. லூக் ஜோன் - பிராந்திய குருமுதல்வர் மற்றும் ஊறணி திருச்சபை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கித்துள் தும்பலாஞ்சோலை மற்றும் முறக்கொட்டாஞ்சேனை அத்துடன் இராலோடை திருச்சபை பாடகர் குழுவினர் மிகவும் சிறப்பாக தங்கள் பாடல்களை பாடி இறைவனை மகிமைப் படுத்தினார்கள். வசதி குறைந்த கிராமங்களாக காணப்பட்டாலும் கித்துள் தும்பலாஞ்சோலை, முறக்கொட்டாஞ்சேனை மற்றும் இராலோடை திருச்சபைப் பாடகர் குழுவினரை பல சிரமங்களுக்கு மத்தியில் திருச்சபை அருட்பணியாளர்கள் தங்களை அர்ப்பணித்து பாடகர் குழுவினரைச் சிறப்பாகத் தயார்படுத்தியிருந்தார்கள். அதே நேரத்தில் பெரியநீலாவணை திருச்சபை மற்றும் ஊறணி திருச்சபை பாடகர் குழுவினரும் தங்கள் பாடல்களை சிறப்பாகப் பாடினார்கள். இவ்வின்னிசை வழிபாட்டைச் சிறப்பாக ஒழுங்கமைப்பதற்கு பிராந்தியக் குருமுதல்வர் அருட்பணி. எம். லூக் ஜோன் அவர்கள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார். அதே நேரத்தில் இவ்வின்னிசை வழிபாட்டை நேர்த்தியாக ஒழுங்கமைப்பதற்கும் சிறப்பாக நடப்பதற்கும் சகல வழிகளிலும் பெரியநீலாவணை திருச்சபை மக்கள், திருச்சபைக் குருவானவர் அருட்பணி. எஸ். ஜோன் புவியரசன் ஆகியோர் தங்கள் ஒத்துழைப்பை சிறப்பாக வழங்கியிருந்தனர். இவ் வழிபாட்டில் சமாதானபுரம் திருச்சபையின் அருட்பணியாளரான அருட்பணி. ரி. சுசேந்தன் அவர்கள் இறைசெய்தியைத் தனது தாய்த் திருச்சபையில் பகிர்ந்து கொண்டார். ஒன்றிணைந்த இன்னிசை வழிபாடு முடிந்தவுடன் காலை ஐக்கிய உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் இணைந்த ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்குப் பிராந்திய அனைத்து திருச்சபைகளும் இரண்டு நிகழ்ச்சிகளை அரங்கேற்றியிருந்தனர். கிறிஸ்மஸ் இணைந்த ஒளிவிழா முடிந்தவுடன் மதிய உணவுடன் அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவடைந்தது. இவ்வளவு பெரிய நிகழ்வுகளையும் கிழக்கு பிராந்திய நற்செய்தி பணிக்குழு சிறப்பாக முன்னெடுத்து ஒழுங்கமைத்திருந்தது. நற்செய்தி பணிக்குழுவின்
இணைப்பாளர் வே. இ. மாறவர்மன் பல வேலைப்பழுக்களின் மத்தியிலும் கிழக்குப் பிராந்தியத் திருச்சபைக் குருக்களின் பூரண ஒத்துழைப்புடன் சிறப்பாக இவைகளை ஒழுங்கமைத்திருந்தார். இந் நிகழ்வின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமையடைந்தது.