“நற்செய்தியை அறிவித்துச் சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைத் தெரியப்படுத்தி, உன் கடவுள் அரசாளுகிறார் என்று சீயோனுக்குச் சொல்லுகிறவனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.” ஏசாயா 52:7
புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், எல்லாராலும் டி. ஆர். அம்பலவாணர் போதகர் என்றன்பாக அழைக்கப்பட்டவரும் நீண்ட காலம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக நற்பணியாற்றியவருமான அருட்பணி. டானியேல் ராஜரட்ணம் அம்பலவாணர் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தினை நினைந்து இக்கட்டுரை வெளிவருகின்றது. முன்னர் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியினால் வெளியிடப்படும் “இறையியல் களஞ்சியம்” என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இக்கட்டுரையானது, சில மாற்றங்களுடன் இங்கு பிரசுரமாகின்றது.
அம்பலவாணர் போதகரை நான், 1978ஆம் ஆண்டு முதல் நன்கு அறிந்தவன் மட்டுமல்ல, மிகவும் நெருக்கமாகப் பழகியவனும் கூட. இறைபணிக்காக நான் என்னை ஒப்புக் கொடுத்தபோது, மதுரை மாநகரின் அரசரடியில் உள்ள “தமிழ்நாடு இறையியல் கல்லூரிக்கு” இறையியல் கற்கை நெறிக்காகச் செல்லும்படி பணிக்கப்பட்டேன். அங்கு செல்லுவதற்கு முன்னர் ஒரு வருடகால தகுதிகாண் பயிற்சிக்காக (Probation Period) திருச்சபை என்னை, 1978ஆம் ஆண்டு மே மாதம் அம்பலவாணர் போதகரின் கீழ் பயிற்சியினைப் பெற்றுக் கொள்ள உடுவில் திருச்சபைக்கு அனுப்பியது. அங்கு போதகருடன் பழகவும், பயிற்சி பெறவும் கிடைத்த அந்த அரிய வாய்ப்பு எனக்கு என்னூழியத்தினை மெருகுபடுத்துவதற்குப் பெரிதும் உதவியது. அங்கு நான், இறைபணியினைக் குறித்த தாற்பரியத்தையும், இறைசெய்தியின் முக்கியத்துவத்தையும் இல்லவழிபாடு, வீடு சந்திப்பு, போன்றவற்றின் அவசியத்தையும் மிகவதிகமாக அறிந்து கொண்டேன்.
அந்த ஒரு வருட காலப் பயிற்சி அனுபவமே எனது குருத்துவ உருவாக்கத்திற்கு அடிகோலியது என்றால் அது மிகையாகாது. அக்காலம் தொடக்கம் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதகர் அவர்கள், மறுமையின் வாழ்வுக்குள் பிரவேசிக்கும்வரை அவரின் முன்மாதிரியான வாழ்க்கையின்வழிநடத்தல், குடும்ப உறவு, ஊழிய முன்மாதிரி, அன்புடன் கூடிய கண்டிப்பு போன்றவற்றினை கண்டு அனுபவித்தவன் என்ற வகையில் அவரில் நான் கண்டுகொண்ட ஆறு சிறப்பு அம்சங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
01. சிறந்த அருளுரையாளர்
இவர் அருளுரையை ஆயத்தம் செய்வதில் கூடுதலான கவனத்தைச் செலுத்தியவர். பிரசங்க பீடத்திற்குத் தகுந்;த ஆயத்தத்துடனும், முழுவதும் எழுதிய பிரதியுடனுமே அருளுரைக்காகச் செல்வார். காலத்திற்கும், சூழ்நிலைகளுக்கும், இடத்திற்கும் ஏற்றதாகவே அவருடைய அருளுரைகள் அமைந்திருந்தன. இறையியல் வெளிப்பாடுகளும் அவைகளில் நிறைந்து காணப்பட்டன. ஆழ்ந்த திருமறை விளக்கங்களும், கேட்போரைக் கவரக்கூடியதான தொனியும், எடுத்துக் காட்டுக்களும் அவரது அருளுரைகளை மேலும் மேலும் மெருகூட்டின. அவரது அருளுரைகள் எப்போதும் ஓர் ஆழமான செய்தியையும், சவாலையும் கேட்போர் மனதில் பதிய வைத்தன. எனது அருளுரையாற்றும் பணிக்கு அவரிடம் காணப்பட்ட அந்த சிறந்த தன்மையே இன்றும் உந்;துதலாக இருக்கின்றது என்பதனை நான் இங்கு சாட்சியமாகப் பதிந்து வைக்க விரும்புகின்றேன்.
02. சிறந்த ஜெப தியான வீரன்
இவர் திருமறையை வாசிப்பதிலும், தியானிப்பதிலும், செபிப்பதிலும் அதிக நேரத்தினைச் செலவிட்டவர். திருமறையை மட்டுமல்ல இதர இறையியல் நூல்களையும், சஞ்சிகைகளையும் வாசிப்பதில் அதிகம் ஈடுபட்டிருந்தவர். போதகருடைய திருமறைப் படிப்புக்கள் அவருக்கிருந்த திருமறையறிவு, இறையியல் நுட்பம், வரலாற்றுத் தரவுகள் என்பன அவருக்கிருந்த பரந்த அறிவை வெளிப்படுத்தின. போதகருடைய செபங்கள் கருத்தாளம் நிறைந்தவை என்பதுடன் சூழ்நிலைகளுக்கும் அந்தந்த சபைகளுக்கும் ஏற்றனவாகவிருந்தன என்பதனை பலதரப்பட்ட மக்களும் கண்டு ஆறுதல் அடைந்திருந்தனர். குடும்பங்களுக்காகத் தேவையறிந்து செபிப்பதில் இவர் வல்லவராகத் திகழ்ந்தார். அத்துடன் அவர், அக்குடும்பத்தில் இருந்த யாவரையும் கவரக் கூடியதாக செபங்;களை முடிப்பார். போதகரும் போதகர் அம்மாவும் சேர்ந்து திருமறையை வாசிப்பதிலும், செபிப்பதிலும் ஒருபோதும் தவறுவதில்லை. இந்த சிறந்;த பண்பு ஒரு ஊழிய குடும்பத்திற்கு அவசியமானது என்பதனை எதிர்காலச் சந்ததி அறிந்துகொள்ளுவது அவசியமானது.
03. சிறந்த கரிசனையுள்ள ஆயன்
அம்பலவாணர் போதகர் அவர்கள் தாம்; பணியாற்றிய சபைகளிலிருந்த குடும்பங்களிலும், குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிலும் கரிசனையுள்ளவராக இருந்தவர். நல்லாயன் தன் ஆடுகளை அறிந்திருப்பதுபோல இவரும் திருச்சபையின் ஒவ்வொருவருடைய தேவைகளையும் நிறைவுகளாயும் குறைவுகளையும் திறமைகளையும் அறிந்தவராகவிருந்து, அதற்கேற்ப அவர்களை வழிநடத்தியவர். அவர் தாம் ஏற்கனவே பணியாற்றிய சபைகளிலிருப்பவர்கள் மேல் தொடர் கரிசனையுள்ளவராக இருந்ததோடு அவர்கள் பற்றியும் விசாரித்து அறிந்து கொள்பவராக இருந்தார். அவர், சபை மக்களின் வீடுகளைச் ச்நதிப்பதிலும், இல்ல வழிபாடுகளை நடாத்துவதிலும் அதிகம் ஆர்வம் காட்;டியவர். போதகர் அம்மா தனது ஆசிரியர் பணியை முடித்து வீடு வந்ததும் ஓய்வு எடுத்தவர் அல்ல: போதகருடன் சேர்ந்து இருவருமாகவே வீடுகளைச் சந்திப்பார்கள். இறையியல் கல்லூரியிலும் மாணவர் நலன்துறைக் காப்பாளராக இருந்தபோது, மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அறிந்தவராகவும் அவர்கள் சுகம், கல்வி, ஒழுக்கம் போன்றவற்றில் கரிசனையுள்ளவராகவும் காணப்பட்டார். உடன் ஊழியர்கள்பாலும் கரிசனையுள்ளவராகக் காணப்பட்டவர். அது ஒரு நல்லாயனுக்கு இருக்க வேண்டிய மிகச் சிறந்த பண்பாகும்.
04. சிறந்த ஆலோசகர்
அவரிடம் வந்து தங்கள் பிரச்சனைகளைக் கூறுபவர்களுக்குப் பொறுமையோடு செவிமடுத்து, தனது கனிவான குரலில் தகுந்த ஆலோசனை கொடுப்பது கடவுள் இவருக்குக் கொடுத்த ஒரு மிகச் சிறந்த கொடையாகும். இவர் ஒருவடைய பிரச்சனைகளை வேறு எவருக்கும் கூறமாட்டார். நான் மதுரை இறையியல் கல்லூரியிலிருந்து எனது உடல் நிலை காரணமாக 1980 இல் திரும்பவும் சொந்த மண்ணுக்கு வந்தபோது, போதகரே எனக்கு ஆறுதலையும் ஆலோசனைகளையும் கூறி, நான் ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டே வெளிவாரியாக படிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைப் பேராயர் அதிவண. டி. ஜே. அம்பலவாணர் அவர்கள் மூலம் செய்து தந்தார். மருதனார்மடம் இறையியல் கல்லூரியிலும் மாணவர்களுக்கிடையே சில பிரச்சினைகளும், புரிந்து கொள்ளா நிலமைகளும் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றைத் தகுந்த முறையில் கையாண்டு ஆலோசனைகூறி மாணவர்களை நெறிப்படுத்தினார்.
05. சிறந்த எழுத்தாளர்
அவர் தன் வாழ்வில் நேரத்தினை வீணாகக் கழித்ததேயில்லை. வாசிப்பதிலும், எழுதுவதிலும் தன்னுடைய நேரத்தனைச் செலவழித்தவர். எழுதிக் கொண்டேயிருப்பார். தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் இலக்கிய வெளியீடுகளின் பொதுப் பதிப்பாசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது பெருமைதரும் விடயமாகும். இவரது காலத்தில் பல இறையியல் சார்ந்த தமிழ் நூல்கள் அங்கு வெளியிடப்பட்டன. போதகரின் கட்டுரைகள், உதயதாரகையையும் அலங்கரித்து நின்றதையும் பலர் பாராட்டியுள்ளனர். “கிறிஸ்தத்வைதம்” என்னும் பெரும் நூலையும் இவர் மொழி பெயர்த்ததுடன் இன்னும் பல நூற்களை உருவாக்கியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இறுதிவரை எழுதிக் கொண்டேயிருந்தவர் இவர்.
06. சிறந்த ஆசான்
கற்பிப்பதில் போதகருக்கு நிகர் போதகரே. இவர், இறையியல் கல்லூரியில் தமிழ், சமயங்கள் உட்பட திருமறை, இறையியல் சார்ந்த பாடங்களையும் கற்பித்தவர். பாடங்களை ஆயத்தப்படுத்திக் குறிப்புக்களைத் தானே எழுதி மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதம் கற்பிப்பதோடு அவர்கள் எழுதுவதற்கும் தானே குறிப்புக்களைக் கொடுத்து சிறந்த முறையில் மாணவர்களை நெறிப்படுத்தியவர். எனது B.Th, B.D படிப்புககளுக்கு போதகரிடம் கற்றுக் கொண்ட அனுபவம் எனக்கும் உண்டு. அவர் கற்பித்தவை மனதைவிட்டு அகலாது. போதகர் தனது ஒய்வின் பின்னர் மானிப்பாயில் “கிறின்விலா” இல்லத்தில் தங்கியிருந்தார். போதகர், போதகர் அம்மாவோடு இறையியல் கல்லூரியில் இருந்தபோதும், பின்னர் போதகர் தனிமையாக மானிப்பாயில் இருந்தபோதும் அவர்களோடு பழகிய காலங்களை எங்களால் என்றும் மறக்க முடியாது. அவரது கனிவான முகம், மிருதுவான நடை, அமைதியான பேச்சு அவருக்குரிய பாணியிலேயே பேசும் சிறப்பு, அவர் காட்டிய கரிசனை, அவரது செபங்கள், போதகர் அம்மாவின் இனிய பாடல்கள், அவர்களுக்கிருந்த பல்வேறு நோய்கள், துன்பங்கள், மனவழுத்தங்கள், கவலைகள் மத்தியிலும் இருவரும் வாழ்ந்த விசுவாச வாழ்வு, ஆடம்பரமற்ற வாழ்க்கைமுறை, ஒருவருக்குமே தீங்கிழைக்காத சுபாவம் என்றும் எங்கள் மனக்கண்கள் முன் நிற்கின்றன. போதகர், போதகர் அம்மா இருவருடைய பாதங்களும் அன்று மண்ணுலகிலும், இன்று விண்ணுலகிலும் அழகுள்ளவையே, ஆண்டருக்கே மகிமையுண்டாகட்டும்.
வண. V. இராஜ்குமார்
ஒய்வு நிலை